இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்தார் இங்கிலாந்து நட்சத்திர பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். ஐந்தாவது பந்தில் கே.எல். ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
அதோடு மட்டுமல்லாமல் புஜாரா (1) விராட் கோலி (7) ஆகியோர் அடுத்தடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் வீழ்ந்தனர். இதனால் இந்தியா 21 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் 78 ரன்னில் சுருண்டது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான் 3 விக்கெடும் ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய பந்து வீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். முதல்நாள் ஆட்டம் முடியும் வரை இந்த ஜோடி ஆட்டமிழக்கவில்லை. இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்துள்ளது.
தற்போதுவரை இந்தியாவை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.