Tamilவிளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான 3 வது டி20 போட்டி – இங்கிலாந்து வெற்றி

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா சேர்க்கப்பட்டார்.

கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 15 ரன்னிலும், இஷான் கிஷன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 24 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. துரதிருஷ்டவசமாக ரிஷப் பண்ட் 20 பந்தில் 25 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அப்போது இந்தியா 11.1 ஓவரில் 64 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 9 ரன்னில் வெளியேறினார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் விராட் கோலி சிறப்பாக விளையாடி 17-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 37 பந்தில் அரைசதம் அடித்தார்.

18-வது ஓவரை மார்க் வுட் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கும், 4-வது பந்தை பவுண்டரிக்கும், 5-வது பந்தை சிக்சருக்கும் விளாசினார் விராட் கோலி. இந்த ஓவரில் இந்தியாவுக்கு 17 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது.

கடைசி ஓவரை ஜோர்டான் வீசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைக்க இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்தது. ஹர்திக் பாண்ட்யா 15 பந்தில் 17 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 46 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணியில் மார்க்வுட் 3 விக்கெட்டும், கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜேசன் ராய் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தாவித் மலான் களம் இறங்கினர். மலான் நிதானமாக விளையாட ஜோஸ் பட்லர் ருத்ரதாண்டவம் ஆடினார். 26 பந்தில் அரைசதம் அடித்தார். 3-வது விக்கெட்டுக்கு பட்லர் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

இங்கிலாந்து அணி 18.2 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பட்லர் 52 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 83 ரன்கள் எடுத்தும், பேர்ஸ்டோவ் 28 பந்தில் 5 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி சார்பில் சாஹல் 4 ஓவரில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். புவேனேஷ்வர் குமார் 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஷர்துல் தாகூர் 3.2 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஹர்திக் பாண்ட்யா 3 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் சாய்த்தார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ளது.