Tamilவிளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் – தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 223 ரன்னகளும், தென் ஆப்பிரிக்கா 210 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 198 ரன்களில் சுருண்டது.

இதையடுத்து 212 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. 3-ம் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 101 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. கீகன் பீட்டர்சன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இன்று 4ம் நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய பீட்டர்சன், இந்தியாவின் வெற்றிக் கனவை தகர்த்தார். நீண்ட நேரம் களத்தில் நின்று கெத்து காட்டிய அவர் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ராசி வான் டெர் டுசென் 41 ரன்களும் (நாட் அவுட்), டெம்பா பவுமா 32 ரன்களும் (நாட் அவுட்) சேர்க்க, தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணி, டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி உள்ளது. கடைசி போட்டியின் சிறந்த வீரர் மற்றும் தொடர் நாயகன் என இரண்டு விருதுகளையும் கீகன் பீட்டர்சன் தட்டிச் சென்றார்.