X

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – நியூசிலாந்து 235 ஆல் அவுட்

நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

பிருத்வி ஷா, புஜாரா மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தனர். இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களில் சுருண்டது.

நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டும், சவுத்தி, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். வாக்னர் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லாதம் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். பிளண்டல் 30 ரன்னும், கிராண்ட்ஹோம் 26 ரன்னும், வாக்னர் 21 ரன்னும் எடுத்தனர்.

பந்து வீச்சில் அசத்திய கைல் ஜேமீசன் பேட்டிங்கிலும் அசத்தினார். அவ்வப்போது பவுண்டரி விளாசி இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்னில் பும்ராவிடம் ஆட்டமிழந்தார்.

இறுதியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 73.1 ஓவரில் 235 ரன்னில் ஆல் அவுட்டானது. இந்தியாவை விட 7 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் ஜடேஜா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags: sports news