இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 57 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் வில் யங் 75 ரன்களுடனும், டாம் லாதம் 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் வில் யங் 89 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 18 ரன்களில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் லாதம் 95 ரன்களில் அக்சர் வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டினை இழந்து வெளியேறினர்.
கடைசியாக நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.