X

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – 2ம் நாள் முடிவில் இங்கிலாந்து 8/555

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன் எடுத்திருந்தது.

கேப்டன் ஜோரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 100-வது டெஸ்டில் ஆடிய அவர் தனது 20-வது செஞ்சுரியை பதிவு செய்தார். அவர் 128 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார். தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லி 87 ரன்கள் எடுத்தார்.

ரோரி பர்ன்ஸ் 33 ரன்னிலும், டேன் லாரன்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது.

ஜோரூட்டுடன், பென் ஸ்டோக் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். அவர் நிதானமாக ஆடினார். மறுமுனையில் இருந்த ஜோரூட் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார்.

இங்கிலாந்து அணி 103.2-வது ஓவரில் 300 ரன்னை தொட்டது. ஜோரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ரன்னை குவித்தார். 260 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அவர் 150 ரன்னை எடுத்தார்.

மறுமுனையில் இருந்து பென்ஸ்டோக்ஸ் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னை எடுத்தார். 68-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 23-வது அரை சதமாகும்.

இருவரது சிறப்பான ஆட்டத்தால் 117.4-வது ஓவரில் அந்த அணி 350 ரன்னை எடுத்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினார்கள்.

மதிய உணவு இடை வேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 355 ரன் குவித்து இருந்தது. ஜோரூட் 156 ரன்னுடனும், பென்ஸ்டோக்ஸ் 63 ரன்னுடனும், ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இதனையடுத்து மீண்டும் களமிறங்கியது இந்த ஜோடியை ஷாபாஸ் நதீம் பிரித்தார். இவர் பந்து வீச்சில் சிக்சர் அடிக்க முயன்ற பென் ஸ்டோக்ஸ் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜோரூட்டுடன் போப் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையடினர்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோரூட் இரட்டை சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் இருந்த போப் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேற அடுத்த சிறுது நேரத்தில் ஜோரூட் 218 ரன்கள் எடுத்த போது ஷாபாஸ் நதீம் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது இங்கிலாந்து அணி 477 ரன்களுக்கு 6 விக்கெடை இழந்திருந்தது.

இந்நிலையில் பட்லர் 26, ஆர்ச்சர் 0 என அடுத்தடுத்து வெளியேற இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 555 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா, பும்ரா, ஷாபாஸ் நதீம், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.