இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இங்கிலாந்து அணியில் 2 புதிய சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்ப்பு
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் உள்ளது. அந்த அணி தென்ஆப்பிரிக்காவுடன் மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
இரு அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் இன்று நடக்கிறது. இந்திய அணியின் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் ஜனவரி 7-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு ஆப்கானிஸ்தான் அணி ஜனவரியில் இந்தியா வந்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஜனவரி 11 முதல் 17 வரை மொகாலி, இந்தூர், பெங்களூரில் போட்டிகள் நடக்கிறது. ஆப்கானிஸ்தான் தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.
இந்தியா- இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 முதல் 29 வரை ஐதராபாத்தில் நடக்கிறது. 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்திலும் (பிப். 2-6), 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டிலும் (பிப். 15-19), 4-வது டெஸ்ட் ராஞ்சியிலும் (பிப். 23-27), கடைசி டெஸ்ட் தர்மசாலாவிலும் (மார்ச் 7-11) நடக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
4 சுழற்பந்து வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளன. 3 புதுமுகங்கள் அணியில் இடம்பெற்று உள்ளனர். ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி, அட்கின்சன் ஆகிய அறிமுக வீரர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவார்கள். 20 வயதான சோயப் பஷீர் கடந்த ஜூன் மாதம் சோமர்செட் அணிக்காக முதல் தர போட்டியில் அறிமுகமாகி 10 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
அட்கின்சன், ஹார்ட்லி ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாடி உள்ளனர். தற்போது டெஸ்ட் அணியில் நுழைந்துள்ளனர். முன்னணி வேகப்பந்து வீரரான கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் வருமாறு:-
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரேஹான் அகமது, பேர்ஸ்டோவ், ஜோரூட், கிராவ்லி, ஆலிராபின்சன், பென் டக்கெட், ஜேம்ஸ் ஆண்டர்சன், அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஹார்ட்லி, ஜேக் லீச், பென் போக்ஸ், ஆலிபோப், மார்க்வுட்.