Tamilவிளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும் – கிரேக் சேப்பல் கருத்து

ஆஸ்திரலேிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மகாராஷ்டிராவின் நாக்பூரில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் இந்த ஆண்டு முழுவதும் ஆடமாட்டார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா முதல் 2 டெஸ்டில் விளையாடவில்லை.

முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ஜடேஜா குணமடைந்துள்ளார். இதனால் அவர் ரஞ்சி டிராபியில் ஆடினார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி 19 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2004-ம் ஆண்டு ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணி 4 போட்டி கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. அந்த அணி கடைசியாக 2017-ம் ஆண்டு இந்தியா வந்த போது 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட், பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலிய அணி இந்த முறை இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றும். சொந்த மண்ணில் சிறப்பாக ஆடக்கூடிய ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் காயத்தில் உள்ளனர். இது இந்தியாவுக்கு பின்னடைவாகும். முதல் முறையாக இந்தியா சொந்த மண்ணில் வலுகுறைந்து உள்ளது. விராட் கோலியை மட்டுமே பெரிதும் நம்பி இருக்கிறது.

இந்திய வீரர்கள் சொந்த மண்ணில் தந்திரங்களை பயன்படுத்துவார்கள். அதற்கு ஏற்ற வகையில் ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சை மாற்றி அமைக்க வேண்டும். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் ஆஸ்டன் அகருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும். முன்னணி சுழற்பந்து வீரரான நாதன் லயன் தனது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும். இருவரும் இணைந்து பந்து வீசினால் இந்திய பேட்ஸ்மேன்களை சமாளிக்கலாம்.

வார்னர் இந்தியாவில் தனது பேட்டிங் சாதனையை மேம்படுத்த வேண்டும். உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி, டிரெவிஸ் ஹெட், கேமரூன் ஓயிட் ஆகியோர் பாகிஸ்தான், இலங்கையில் எதிர்கொண்டதை விட இந்தியாவில் சுழற்பந்து தரமாக இருக்கும். அவர்களுக்கு சோதனை காத்திருக்கிறது.

லபுசேன் இந்திய துணை கண்டத்தில் தனது முதல் பெரிய சோதனையை எதிர்கொள்வார். ஆஸ்திரேலியா வெற்றி பெற புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்துவதே ஆஸ்திரேலியாவின் முக்கிய அம்சமாக இருக்கும். ஆஸ்திரேலிய வீரர்கள் ஒட்டுமொத்த திறமையும் வெளிப்படுத்த வேண்டும். இந்திய மண்ணில் வெற்றி பெறுவதற்கு திட்டமிடல், பொறுமை, விடாமுயற்சி தேவை என தெரிவித்தார்.