இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 டெஸ்டுகளிலும் 250 ரன்களுக்கு மேலான இலக்கை தடாலடியாக ரன்மழை பொழிந்து எட்டிப்பிடித்தது.
கொரோனா பிரச்சினையால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு தற்போது நடக்க உள்ள இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இதே போல் அதிரடி காட்டுவோம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரித்துள்ளார்.
இது குறித்து ஸ்டோக்ஸ் அளித்த பேட்டியில், ‘உலகின் தலைச்சிறந்த அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. அடுத்து நாங்கள் மற்றொரு அணியை எதிர்கொண்டாலும் கூட அதே மனநிலையில் (ஆக்ரோஷமான ஆட்டம்) தான் விளையாடுவோம். அதில் மாற்றம் இருக்காது. நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டுகளில் நாங்கள் என்ன செய்தோமோ அதை இந்தியாவுக்கு எதிரான டெஸ்டிலும் தொடர்வதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்’ என்றார்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தற்போது இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணியினர் தீவிரமாக உள்ளனர். கடந்த ஆண்டு மனஅழுத்தம் காரணமாக இந்த தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் ஒதுங்கி இருந்தது நினைவு கூரத்தக்கது.