X

இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையையும் அனுமதிக்க மாட்டோம் – பாகிஸ்தான் உறுதி

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் குருநானக். இவர் பாகிஸ்தானில் உள்ள நரோவல் மாவட்டம், கர்தார்பூரில் தன் இறுதிநாட்களை கழித்தார். இவரது நினைவாக இந்திய எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் கர்தார்பூரில் தர்பார் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கர்தார்பூருக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இல்லாமல் புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு வசதியாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரையும், கர்தார்பூரையும் இணைத்து சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரிந்தர் சிங் ஆகியோர் கர்தார்பூர் வழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டினர். நரோவாலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடிக்கல் நாட்டினார்.

இந்த வழித்தடம் அமைப்பது தொடர்பாக இந்திய, பாகிஸ்தான் அதிகாரிகள் இடையே முதல் சுற்றுப்பேச்சுவார்த்தை எல்லையின் இந்திய பகுதியில் அட்டாரியில் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி நடந்தது. ஏப்ரல் 2-ந் தேதி வாகா எல்லையில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடந்திருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் தரப்பு குழுவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் கோபால் சிங் சாவ்லாவை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா அந்த பேச்சுவார்த்தையை ஒத்திபோட்டது. இப்போது இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அந்த குழுவில் இருந்து சாவ்லாவை பாகிஸ்தான் நீக்கியது.

அதைத்தொடர்ந்து வாகா எல்லையில் இந்திய, பாகிஸ்தான் அதிகாரிகள் மட்டத்திலான 2-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.

இந்திய தரப்பில் உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் தாஸ் தலைமையிலான குழுவும், பாகிஸ்தான் தரப்பில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தலைமையிலான குழுவும் பங்கேற்றன.

இந்த கர்தார்பூர் வழித்தட திட்டத்தை விரைவாக செய்து முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள், இருபுறமும் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின்போது, கர்தார்பூர் வழித்தடத்தில் இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையையும் அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் உறுதி அளித்தது.

இதையொட்டி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் பேச்சுவார்த்தை பற்றி கூறி இருப்பதாவது:-

புனித பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பயணத்துக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டியதின் முக்கியத்துவம் பேச்சுவார்த்தையின்போது இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த சூழலில் பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்குகிற தனிநபர்களும், அமைப்புகளும் கர்தார்பூர் புனித பயணத்துக்கு இடையூறு செய்வதற்கும், புனிதப்பயணிகளின் உணர்வுக்கு குந்தகம் விளைவிப்பதற்கும் உள்ள வாய்ப்புகள் பற்றிய இந்தியாவின் கவலைகள் பகிரப்பட்டன.

கர்தார்பூர் சாகிப் குருத்வாராவில், புனித பயணிகளுக்கு உதவுவதற்கு தூதரக அதிகாரிகள் இருப்பையும் இந்தியா கோரி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தொழில்நுட்ப குழு கூட்டங்களில் எட்டப்பட்ட முடிவுகளின் செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.