X

இந்தியாவில் 198 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 198 கோடியை கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட 90 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்கள் செலுத்தப்பட்டு விட்டது என்றார். இதுதொடர்பாக, சுகாதாரத்துறை மந்திரி மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மிகவும் சிறப்பான சாதனை. அனைவரின் முயற்சியால் நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் இரு டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

இன்னும் நிறைய தூரம் உள்ளது. நோய் தொற்றுக்கு எதிரான போரில் நாம் ஒன்றிணைந்து வெற்றிபெறுவோம் என குறிப்பிட்டுள்ளார்.