Tamilசெய்திகள்

இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 12,213 பேர் பாதிப்பு

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் புதிய பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நேற்று பாதிப்பு 8,822 ஆக இருந்தது. இந்நிலையில் ஒரே நாளில் பாதிப்பு 38.4 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி 27-ந் தேதி பாதிப்பு 10,273 ஆக இருந்தது. அதன் பிறகு 109 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அம்மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு ஒரு நாள் பாதிப்பில் அதிகம் ஆகும். குறிப்பாக தலைநகர் மும்பையில் 2,292 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 143 நாட்களில் இல்லாத அளவில் அதிகம் ஆகும்.

மும்பையில் தினசரி பாதிப்பு விகிதம் 14 சதவீதத்தை தாண்டி உள்ளது. மேலும் மும்பை, புனே, தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பரவல் அதிகரித்ததே தொற்று பாதிப்பு சதவீதம் உயர காரணம் என மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறி உள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் 4 பேருக்கு ஒமைக்ரானின் புதிய திரிபான பிஏ.5 வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனாவால் புதிதாக 3,488 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 1,375, கர்நாடகாவில் 648, அரியானாவில் 596, தமிழ்நாட்டில் 476, உத்தரபிரதேசத்தில் 313, மேற்கு வங்கத்தில் 230, தெலுங்கானாவில் 205 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 32 லட்சத்து 57 ஆயிரத்து 730 ஆக உயர்ந்தது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7,624 பேர் நேற்று அதன் பிடியில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 58,215 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 4,578 அதிகம் ஆகும்.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 3 மரணங்கள் மற்றும் மகாராஷ்டிரத்தில் 2 பேர், கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தலா ஒருவர் என 11 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,24,803 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று 15,21,942 டோஸ்களும், இதுவரை 195 கோடியே 67 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நாள்தோறும் 4 லட்சம் என்ற அளவிலேயே பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று 5,19,419 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 85.63 கோடியாக உயர்ந்துள்ளது.