Tamilவிளையாட்டு

இந்தியாவில் ரன் குவிக்க முடியவில்லை என்றால் உங்களால் வேறு என்ன செய்ய முடியும்? – கே.எல்.ராகுல் பற்றி கங்குலி கருத்து

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பாடர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தாலும் இந்த தொடரில் அதிகமாக பேசப்படும் விஷயமாக இருப்பது இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுலின் பேட்டிங் குறித்துதான்.

ஏனெனில் ஏற்கனவே முதல் இரண்டு போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு மூன்றாவது போட்டியிலும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனர். கே.எல் ராகுல் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

இந்நிலையில் இந்தியாவில் விளையாடும் போதே உங்களால் ரன்னடிக்க முடியவில்லை என்றால் வேறு என்ன செய்ய முடியும் என்று காட்டமான கருத்தினை கங்குலி வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்:- உங்களால் இந்தியாவிலேயே ரன்களை குவிக்க முடியவில்லை என்றால் நிச்சயம் உங்கள் மீது விமர்சனம் எழத்தான் செய்யும்.

கே.எல் ராகுல் மட்டும் இந்த நிலையை சந்திக்கவில்லை. இதேபோன்று பலவீரர்கள் இந்த நிலையை சந்தித்திருக்கிறார்கள். துணைக்கேப்டன் பதவி நீக்கம் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். தேர்வு குழுவினர் தொடர்ச்சியாக அவரை கவனித்து வந்து தான் இந்த முடிவை எடுத்து இருப்பார்கள்.

இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அவரது திறனை பார்த்து வருவதாலேயே அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கி வருகிறார் என்று கங்குலி வெளிப்படையாகவே கூறியது குறிப்பிடத்தக்கது.