இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, தற்போது முன்எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் போடப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி
செலுத்தி 9 மாதங்களான நிலையில், பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பூஸ்டர் டோஸ் போட மக்களிடம் பெரிதான ஆர்வம் இல்லை.
ஏப்ரல் 10-ந் தேதியில் இருந்து இதுவரை 4.64 லட்சம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர்.
பூஸ்டர் டோஸ் போடுவதால் பாதகமான விளைவு ஏற்படுமோ என்ற பயம், உண்மையிலேயே பூஸ்டர் டோஸ் பயன் அளிக்குமா என்பது போன்ற சந்தேகம் மக்களிடம் நிலவுவதாக சொல்லப்படுகிறது.
இதில் மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
டாக்டர் டி.ஜான் ஜேக்கப் (நச்சுயிரியல் வல்லுனர்):-
நீண்ட காலமாக முழுமையான தடுப்பூசி என்பது 2 டோஸ் என மக்களுக்கு சொல்லப்பட்டது. இப்போது பூஸ்டர் டோசுக்கு பதிலாக முன்எச்சரிக்கை டோஸ் என்ற வார்த்தையை சேர்த்தது குழப்பத்தை
ஏற்படுத்தி உள்ளது.
நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் கூடிய உண்மைத்தகவல்கள், மக்களின் கவலைகளைப் போக்கும். தொற்று நோய் முடிந்து விட்டதால் நோயின் ஆபத்து கணிசமாக குறைந்து இருக்கும்போது,
நோய்த்தடுப்பினால் ஏற்படும் பாதக நிகழ்வு ஆபத்தைப்பற்றி மக்கள் கவலைப்படுகிறார்கள். தடுப்பூசி தயக்கம் உருவாக்கப்பட்டவுடன் அதை சமாளிப்பது கடினமாக இருக்கும். குணப்படுத்துவதை
விட தடுப்பது சிறந்தது.
பிரவிண் சிக்ரி (இக்ரிஸ் பார்மா தலைமை செயல் அதிகாரி):-
கடைசி அலை (3-வது அலை) லேசானது என நினைத்து, முன்எச்சரிக்கை டோஸ் தேவையா? என மக்கள் கேள்வி கேட்கின்றனர்.
குழந்தைகளுக்கு கல்லீரல் செயலிழப்பு, ரத்த உறைவு பிரச்சினை, தடுப்பூசியால் இறப்பவர்கள் பற்றிய பிரசாரங்கள் போன்றவை, முன்எச்சரிக்கை டோஸ் எடுப்பதில் தயக்கம் ஏற்படுத்துகின்றன.
ஒமைக்ரான் அலை மிக ஆபத்தான ஒன்றாக இல்லாததால், தடுப்புசி சோர்வை அது அதிகரிக்கிறது.
இதற்கு எதிராக பேச வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. முடிவு எடுக்க மக்களை விட வேண்டும். தடுப்பூசி திட்டங்கள் இல்லாத நாடுகள், இப்போது மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை
மக்களிடம் தெரியப்படுத்துவது முக்கியம்.
டாக்டர் அங்கிதா பைத்யா (தொற்றுநோய் ஆலோசகர்):-
ஒரு தொற்றுநோய் மருத்துவர் என்ற முறையில் தடுப்பூசியின் பொதுவான பக்கவிளைவு, உடல்நலக்குறைவு என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். ஆனால் கோடை காலம் தொடர்வதையும், பூஸ்டர்
டோஸ் போடுவதால் மக்கள் சோர்வை அனுபவிப்பதையும் பார்க்கிறேன். ஆனால், இது நீடிக்கக்கூடாது. தடுப்பூசி போட்ட ஆரம்ப நாட்களில் யாராவது சோர்வு, உடல் சோர்வு, உடல் வலி உணர்ந்தால்
அது பக்க விளைவுதான். அது போய்விடும். பூஸ்டர் டோஸ் பயன் பற்றிய ஆலோசனை முக்கியம் என்று அவர்கள் கூறி உள்ளனர்.