X

இந்தியாவில் புதிதாக 41,649 பேர் கொரோனாவால் பாதிப்பு

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,649 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

நேற்று முன்தினம் பாதிப்பு 44,230 ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நேற்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பு 3 கோடியே 16 லட்சத்து 13 ஆயிரத்து 993 ஆக உயர்ந்தது.

தினசரி பாதிப்பில் கேரளா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அங்கு புதிதாக 20,772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் 6,600, ஆந்திராவில் 2,068, தமிழ்நாட்டில் 1,947, கர்நாடகாவில் 1,890, ஒடிசாவில் 1,558, அசாமில் 1,179 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

ஒரு வார கொரோனா பாதிப்பு சராசரியாக 40,206 ஆக உள்ளது. கடந்த 25-ந் தேதி நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 37,680 ஆக இருந்தது.

சுமார் 2 வாரத்திற்கு பிறகு ஒரு வார பாதிப்பு சராசரியாக மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் 231, கேரளாவில் 116, ஒடிசாவில் 66 பேர் உள்பட நேற்று 593 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,23,810 ஆக உயர்ந்தது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,32,566, கர்நாடகாவில் 36,525, தமிழ்நாட்டில் 34,050, டெல்லியில் 25,052, உத்தரபிரதேசத்தில் 22,756 பேர் அடங்குவர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 37,291 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 81 ஆயிரத்து 263 ஆக உயர்ந்தது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 4,08,920 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 27-ந் தேதி இந்த எண்ணிக்கை 3.98 லட்சமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக புது நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரை 46.15 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் 35.98 கோடி பேருக்கு முதல் டோசும், 10.16 கோடி பேருக்கு 2-வது டோசும் போடப்பட்டுள்ளது.

இதில் இன்று காலை 7 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,99,036 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நாடு முழுவதும் இதுவரை 46.64 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் நேற்று மட்டும் 17,76,315 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.