Tamilசெய்திகள்

இந்தியாவில் புதிதாக 2,628 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 2,628 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 500-க்குள் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதே போல நேற்று மகாராஷ்டிரத்தில் 470 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது அம்மாநிலத்தில் கடந்த 1½ மாதங்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும்.

டெல்லியில் 424, அரியானாவில் 245, கர்நாடகாவில் 208, உத்தரபிரதேசத்தில் 122 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 44 ஆயிரத்து 820 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் மேலும் 18 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் 13 மரணங்கள் சேர்க்கப்பட்டதும் அடங்கும்.

இதுதவிர நேற்று டெல்லியில் 4, ராஜஸ்தானில் ஒருவர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,525ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,167 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 4 ஆயிரத்து 881 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 15,414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 443 அதிகம் ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 13,13,687 டோஸ்களும், இது வரை 192 கோடியே 82 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 84.84 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,52,580 மாதிரிகள் அடங்கும்.