மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் தளத்தில், ”எச்3என்2′ பரவல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், வைரஸ் பரவலை தடுக்க தனிக்கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் மாநிலங்களுடன் மத்திய அரசு இணைந்து செயல்படுகிறது. அத்துடன் நிலைமையை சமாளிக்க தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு உதவிகளையும் வழங்கி வருகிறது’ என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்களுக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் கடந்த வாரம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரைத்து இருந்தது.
அதன்படி, கைகளை சோப் மூலம் கழுவுதல், தொற்று அறிகுறி இருப்பவர்கள் முககவசம் அணிவது, கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, தும்மும்போதும், இருமும்போதும் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்வது போன்ற செயல்முறைகளை பின்பற்ற அறிவுறுத்தி இருந்தது.
மேலும் அதிக தண்ணீர் குடித்தல், கண்கள், மூக்கை தொடுவதை தவிர்த்தல், காய்ச்சல், உடல்வலி இருந்தால் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுதல் போன்ற அறிவுறுத்தல்களையும் வழங்கி இருந்தது. அதேநேரம் கைகுலுக்குதலை தவிர்த்தல், பொது இடங்களில் துப்புவதை தவிர்த்தல், டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாடிக் அல்லது பிற மருந்துகளை எடுத்துக்கொள்வதை தவிர்த்தலையும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.