X

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.41 லட்சமாக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,41,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 53 லட்சத்து 68 ஆயிரத்து 372 ஆக உயர்ந்தது.

நேற்று முன்தினம் பாதிப்பு 1,17,100 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரேநாளில் பாதிப்பு 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 28-ந் தேதியில் இருந்து தொடர்ந்து 11 நாட்களாக தினசரி பாதிப்பு நாள் தோறும் 20 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து வருவது தொற்று பரவலின் வேகத்தை காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மகாராஷ்டிராவில் மேலும் 40,925 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மும்பையில் மட்டும் 20,971 பேர் அடங்குவர். இது 3-வது அலையில் மும்பையில் இதுவரை இல்லாத அளவில் அதிகம் ஆகும்.

அங்கு நேற்று முன்தினமும் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

டெல்லியிலும் தொற்று பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளது. அங்கு புதிதாக 17,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொற்று பரவல் விகிதமானது 17.73 சதவீதமாக உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.

3-வது அலையின் தீவிரம் மேற்கு வங்கத்திலும் அதிகமாக உள்ளது. அங்கு புதிதாக 18,213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அங்கு புதிதாக 8,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவிலும் புதிய பாதிப்பு 8,449 ஆக உயர்ந்தது. கேரளாவில் 5,296, உத்தரபிரதேசத்தில் 4,223, குஜராத்தில் 5,396, ஜார்கண்டில் 3,825, ராஜஸ்தானில் 3,300, அரியானாவில் 3,748, பீகாரில் 3,048 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 189 மரணங்கள் உள்பட நாடு முழுவதும் நேற்று 285 பேர் இறந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,83,463 ஆக உயர்ந்தது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,41,614, கேரளாவில் 49,305 பேர் அடங்குவர்.

கடந்த 10 நாட்களாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்கள் அதிகமாக உள்ளனர். நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,71,363 ஆக இருந்த நிலையில், தற்போது 4,72,169 ஆக உயர்ந்துள்ளது.

அதாவது நேற்று ஒரேநாளில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் மேல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 1.45 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 150 கோடியே 61 லட்சத்தை கடந்துள்ளது. இதில் நேற்று மட்டும் 90,59,360 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 15,29,948 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்தம் 68.84 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.