Tamilசெய்திகள்

இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது – அமெரிக்கா புகார்

2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுகிறது.

மத சமூகங்களுக்கு தனித்தனி சட்டங்கள் அமைப்பதற்குப் பதிலாக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை (யு.சி.சி.) அமல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் மற்றும் பழங்குடியின தலைவர்கள் மற்றும் சில மாநில அரசு அதிகாரிகள் எதிர்த்தனர். இது நாட்டை இந்து தேசமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் மதமாற்ற தடுப்புச் சட்டங்கள், வெறுப்பு பேச்சு மற்றும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்.

ஏற்கனவே, மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையிலும் இந்தியாவுக்கு எதிரான கருத்தை அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால் அந்த அறிக்கையை இந்தியா உடனடியாக நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.