Tamilசெய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தோன்றி பரவியது.

கடந்த 2 மாதங்களுக்குள் இந்த வைரஸ் உலகையே அச்சுறுத்தும் வகையில் 80 நாடுகளில் பரவி உள்ளது. நேற்று மட்டும் 264 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. உலக அளவில் நேற்று இந்த வைரஸ் தாக்கி சிகிச்சை பலனின்றி 39 பேர் உயிரிழந்தனர்.

இன்று காலை நிலவரப்படி கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தை எட்டியுள்ளது. அவர்களில் 6,771 பேர் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை 3,203 பேர் உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு பலியாகி விட்டனர்.

ஆட்கொல்லி நோயாக மாறியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை எந்த நாட்டிலும் உரிய மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக தடுப்பு மருந்துகள் மூலம் இந்த வைரசை அனைத்து நாடுகளும் எதிர்கொண்டு வருகின்றன. மிக வேகமாக பரவுவதால் அனைத்து நாடுகளும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள்ளும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. சீனாவின் வுகான் நகரில் தங்கியிருந்த 3 கேரள மாணவர்கள் கடந்த மாதம் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 3 பேரும் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்து வீடு திரும்பினார்கள்.

இதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் நுழைவதை தடுக்க 13 சர்வதேச விமான நிலையங்கள், 21 துறைமுகங்களில் தீவிர மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் அந்த சோதனை, கண்காணிப்பை மீறி வெளிநாடுகளில் இருந்து வந்த டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பயணிகளில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது நேற்றுமுன்தினம் உறுதியானது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று உறுதியானது.

அந்த சுற்றுலா பயணிகள் குழுவில் மொத்தம் 20 பேர் உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து இருப்பதாக இன்று காலை தகவல் வெளியானது. டெல்லி நொய்டாவில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆக்ராவில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புடன் வந்த டெல்லி, தெலுங்கானா பயணிகளும் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள இத்தாலி சுற்றுலா பயணிகளும் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு கடந்த சில தினங்களாக சென்று வந்துள்ளனர். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

இதன் காரணமாக அவர்களிடமிருந்து மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் உஷார்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் மருந்து, மாத்திரைகளை தேவையான அளவுக்கு இருப்பு வைக்கும்படி அனைத்து மாநில அரசுகளும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன. மேலும் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வருபவர்களை தனிமைப்படுத்துவதற்கான வார்டுகளை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எத்தனை வார்டுகள் உள்ளன. அவற்றில் எத்தனை படுக்கைகளை தயார் நிலையில் வைக்க முடியும் என்று பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வு செய்துள்ளது.

இது தவிர நாடு தழுவிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளது. அதன் ஒரு பகுதியாக முக கவசங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் முதல் கட்டமாக 3½ லட்சம் முக கவசங்கள் தயார் நிலையில் உள்ளது.

இதற்கிடையே டெல்லி, தெலுங்கானா, ஜெய்ப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஒரு மாதத்தில் எந்தெந்த ஊருக்கு போனார்கள், யார்-யாரை சந்தித்தார்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. டெல்லி நபர் தனது மகன் படிக்கும் பள்ளிக்கூடம் மற்றும் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார். அதுபோல் ஜெய்ப்பூரில் உள்ள இத்தாலி சுற்றுலா பயணி பல மாநிலங்களுக்கு சென்று வந்துள்ளார்.

தெலுங்கானாவில் உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் பெங்களூர் உள்பட சில இடங்களுக்கு சென்று வந்துள்ளார். அந்த வகையில் இவர்களுடன் நெருக்கமாக இருந்த சுமார் 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் 14 நாட்களுக்கு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் தனது மகனுடன் பள்ளிக்கூடத்துக்கு சென்று இருந்ததால் அந்த பள்ளிக்கூடம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் மேலும் 4 பள்ளிக்கூடங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

அதுபோல சுற்றுலா பயணிகள் சென்ற நட்சத்திர ஓட்டல்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதித்தவர்களுடன் பழகிய நட்சத்திர ஓட்டல் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் பயணம் செய்த விமானங்களில் உள்ள விமான பணிப்பெண்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

ஐதராபாத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் அதுபற்றி தெரியாமல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முக கவசம் அணியாமல் இருந்துள்ளனர்.

இதை அறிந்ததும் அவருக்கு சிகிச்சை அளித்த 22 டாக்டர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களும் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 25 மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் 3 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. ஐதராபாத்தில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர் கொரோனா வைரசில் இருந்து மீண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவருடன் பழகிய 88 பேர் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இருப்பவர்களுக்கு உடனுக்குடன் மருத்துவ பரிசோதனைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேகமாக 13 சோதனை கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த சோதனை கூடங்களில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய முடியும்.

ஈரானில் இருந்து வந்துள்ள சுமார் 80 பேர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளதா? என்பது பற்றி சோதனை நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து இருப்பதால் இந்தியாவில் இருந்து 26 வகையான மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *