X

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 166 ஆக உயர்வு

சீனாவில் இருந்த பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகத்துக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. இந்த வைரஸ் 165 நாடுகளுக்கு பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினமும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சீனாவில் வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில், தற்போது இத்தாலி, ஸ்பெயின், ஈரான் ஆகிய 3 நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் நேற்று வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 151 ஆக இருந்தது. தற்போதைய நிலவரப்படி 166 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 141 இந்தியர்கள், 25 பேர் வெளிநாட்டினர். கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.