X

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க ஒமைக்ரானின் புதிய வகை வைரஸே காரணம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதற்கு ஒமைக்ரானின் புதிய வகை திரிபான பிஏ.2 வகை தொற்று பரவுவதே காரணம் என சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர். அதிலும் பிஏ.2 வகையில் துணை திரிபான பிஏ.2.38 வகை தொற்றுகள் மெல்ல, மெல்ல தனது ஆதிக்கத்தை செலுத்தி வருவதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வகை பிரிவுகள் வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர். அதே நேரம் இந்த வகை தொற்றால் தீவிர பாதிப்பு ஏற்படுவது இல்லை என்பது சற்று ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த வகை தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு காய்ச்சல், சளி, உடல் வலி, தொண்டை வலி, தலைவலி ஏற்படும் எனவும் கூறுகின்றனர்.

பிஏ.2.38 வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 73 சதவீதம் பேருக்கு காய்ச்சல் ஏற்படுவது தெரியவந்துள்ளது. மேலும் 23 சதவீதம் பேருக்கு சளி, 17 சதவீதம் பேருக்கு உடல்வலி, 15 சதவீதம் பேருக்கு தொண்டை வலி, 13 சதவீதம் பேருக்கு தலைவலி ஏற்படுவது தெரியவந்துள்ளது.

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமல்லாது குஜராத், டெல்லி, கர்நாடகா, அரியானா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா உள்பட நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தொற்று பாதிப்பு உயர்வதற்கு இந்த வகை தொற்றுகளே காரணமாக அமைந்துள்ளது எனவும் சுகாதரத்துறையினர் கூறுகின்றனர்.

புதிய தொற்றால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் எந்த அளவிற்கு வேகமாக பரவுகிறது என்பதை அரிய மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.