இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!
பல்வேறு உலக நாடுகளைப்போல இந்தியாவிலும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சுமார் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏராளமான நோயாளிகளை உருவாக்கி உள்ளது. இவற்றில் சிலரின் உயிரையும் குடித்து விட்டது. அந்தவகையில் மராட்டியம், குஜராத், தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, இமாசல பிரதேசம் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மொத்தம் 16 பேர் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்து விட்டனர். இதில் நேற்று மட்டுமே 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீநகரின் ஹைதர்போராவை சேர்ந்த 65 வயது முதியவர் உயிரிழந்ததன் மூலம், காஷ்மீரில் முதல் பலி பதிவாகி உள்ளது.
இதைப்போல நாடு முழுவதும் கொரோனாவுக்கு ஆட்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் நேற்று 727 ஆக உயர்ந்து விட்டது. இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கேரளாவிலும் சுமார் 120 பேர் கொரோனாவின் கொடூர கரங்களில் சிக்கி உள்ளனர். குஜராத்தில் நேற்று மேலும் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்த எண்ணிக்கை 43 ஆனது. டெல்லியிலும் இதுவரை 36 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மராட்டியத்தில் கடந்த 24-ந்தேதி மரணமடைந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. அவரின் உறவினர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தன் இந்தூரில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த 47 வயது நபர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு சமீபத்திய வெளியூர் பயண வரலாறு எதுவும் இல்லாத நிலையில் அவரது பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவாவில் முதன்முதலாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களது உறவினர்களை கண்டறியும் பணிகளை முடுக்கி விட்டிருப்பதாக முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். மாநிலத்தில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றுவோம் என சுகாதார மந்திரியும் அறிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் துயருக்கு உள்ளாகி இருக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவுவதாக பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர், நடிகை டாப்சி ஆகியோர் அறிவித்து உள்ளனர். உத்தரபிரதேசத்தின் சாம்லி மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு சர்க்கரை தொழிற்சாலை, அருகில் உள்ள 75 கிராமங்களை தூய்மை செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது.
இதற்கிடையே நாடு முழுவதும் 42 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த வானிலையால் கொரோனா பரவலின் வேகம் குறைவதாக எம்.ஐ.டி. நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் மட்டும் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.