X

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கேட்கும் நிறுவனங்கள்

அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனாவுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசி 95 சதவீதம் பயன் அளிப்பதாக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளன. பைசர் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு பிரிட்டன் மற்றும் பக்ரைன் நாடுகள் அனுமதி அளித்தது.

இதனையடுத்து, இந்தியாவில் பைசர் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் பைசர் இந்தியா நிறுவனம் நேற்று விண்ணப்பித்தது.

இந்நிலையில், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கி வரும் சீரம் நிறுவனம், தங்கள் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் இன்று விண்ணப்பித்துள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஸ்வீடனின் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் செயல்திறன் கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்யும் உரிமத்தை புனேவை தலைமையிடமாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பெற்று, கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பூசியை தயாரித்துள்ளது.

இந்தியாவில் அவசரமாக தேவைப்படும் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் சீரம், கோவிஷீல்டு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனையை பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.