இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. அதேசமயம் வைரஸ் பரவுவதில் அதிவேகம் இல்லை என மத்திய அரசு கூறியிருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 23,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1684 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 37 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 718 ஆக உயர்ந்துள்ளது. 4749 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. அங்கு 6430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 283 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 2624 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 112 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 2376 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 பேர் உயிரிழந்துள்ளனர்.