சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கேரளா மாநிலத்தில்தான் முதன்முதலில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் கொரோனா தாக்குதல் ஏற்பட்டது.
மகாராஷ்டிரா, கேரளா, அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, காஷ்மீர், லடாக், தமிழ்நாடு, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 14 மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு இந்தியாவில் இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவரும், டெல்லியைச் சேர்ந்த 69 வயது மூதாட்டியும் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 24 பேருக்கும், அரியானாவில் 14 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 13 பேருக்கும், தெலுங்கானாவில் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.