இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9304 பேர் கொரோனாவால் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 216919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 260 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6075 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 104107 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 3804 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 106737 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 75 ஆயிரத்தை நெருட்ஙகி உள்ளது. மொத்தம் 74860 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 25872 பேருக்கும், டெல்லியில் 23645 பேருக்கும், குஜராத்தில் 18100 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.