X

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் – தென் ஆப்பிரிக்க மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

தென்ஆப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஏஞ்சலிக் கோயட்சி. இந்த பெண் நிபுணர்தான், கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவில் முதன்முதலாக ‘ஒமைக்ரான்’ வைரசை அடையாளம் கண்டவர்.

உலகம் முழுவதும் பரவி விட்ட ஒமைக்ரான் குறித்து இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்து தொலைபேசி மூலம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

ஒமைக்ரான் அச்சுறுத்தவில்லை. வேகமாக பரவி வருகிறது. இருப்பினும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு நோயின் தீவிரம் குறைவாகவே உள்ளது.

ஒமைக்ரானின் ஒரே நோக்கம், வெதுவெதுப்பான உடலை தாக்கி, அங்கு வசிப்பதுதான். குழந்தைகளையும் ஒமைக்ரான் தாக்கும். இருப்பினும், 5 அல்லது 6 நாட்களில் குழந்தைகள் குணமடைந்து விடுவார்கள். ஒமைக்ரான், எதிர்காலத்தில் வேறு கொடிய வைரசாக உருமாறலாம் அல்லது உருமாறாமலும் போகலாம். ஒமைக்ரானுடன் கொரோனா தொற்று முடிந்து விடும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. விரைவில் அது முடிவுக்கு வருவது கடினம். கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. அது உள்ளூர் நோயாக மாறும்.

இந்தியாவை பொறுத்தவரை ஒமைக்ரான் பாதிப்பு கிடுகிடுவென உயரும். ஆனால், தென்ஆப்பிரிக்காவில் நடந்ததை போலவே பெரும்பாலானோருக்கு நோயின் தீவிரம் லேசாக இருக்கும்.

தற்போதைய தடுப்பூசிகள், ஒமைக்ரான் பரவலை குறைக்க உதவும். தடுப்பூசி போட்டவர்களும், ஏற்கனவே கொரோனா வந்தவர்களும் ஒரு சிலருக்கு மட்டுமே ஒமைக்ரானை பரப்புவார்கள். ஆனால், தடுப்பூசி போடாதவர்கள் 100 சதவீதம் பரப்புவார்கள். அவர்களுக்கு ஆபத்து அதிகம்.

அதே சமயத்தில், ஒமைக்ரானை கட்டுப்படுத்த தடுப்பூசியை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது. முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.