X

இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் டாடா குழுமம்

டாடா குழுமம் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான ஐபோன்களை இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்ய இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்து உள்ளார். மேலும் இதே தகவலை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலும் வெளியிட்டு உள்ளார்.

அந்த பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் PLI திட்டம் மூலம் இந்தியா ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு நம்பத்தகுந்த மற்றும் மிகமுக்கிய தளமாக உருவெடுத்து இருக்கிறது. இன்னும் கிட்டத்தட்ட இரண்டறை ஆண்டுகளில், உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைக்கான ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்ய இருக்கிறது.”

“விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதற்கு டாடா குழுமத்திற்கு வாழ்த்துகள். இதுவரை வழங்கிய பங்களிப்புகள் அனைத்திற்கு விஸ்ட்ரன் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தியாவில் இருந்து இந்திய நிறுவனங்களை வைத்து சர்வதேச விநியோகத்தை விரிவுப்படுத்த இருக்கும் ஆப்பிள் சரியான முடிவை எடுத்து இருக்கிறது.”

“இந்தியாவை சக்திவாய்ந்த மின்னணு தளமாக உருவாக்க நினைக்கும் பிரதமர் மோடியின் இலக்கை அடைய உதவுவதற்கும், இந்தியாவில் தங்களது சாதனங்களை நம்பிக்கையாக உற்பத்தி செய்ய முன்வரும் சர்வதேச மின்னணு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச இந்திய மின்னணு நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முழுமையான ஆதரவை வழங்கும்,” என்று தெரிவித்து இருக்கிறார்.