X

இந்தியாவில் இன்று 3.37 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 3 நாட்களாக கடுமையாக உயர்ந்த நிலையில், நேற்று சற்று குறைந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,37,704 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 89 லட்சத்து 3 ஆயிரத்து 731 ஆக உயர்ந்தது.

கடந்த 17-ந்தேதி நிலவரப்படி, தினசரி பாதிப்பு 2.38 லட்சமாக இருந்தது. மறுநாள் 2.82 லட்சமாகவும், அதற்கு மறுநாள் 3.17 லட்சமாகவும், நேற்று முன்தினம் 3.47 லட்சமாகவும் உயர்ந்தது. இந்நிலையில் நேற்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் 19,35,912 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் தினசரி பாதிப்பு விகிதம் 17.94 சதவீதத்தில் இருந்து 17.22 ஆக குறைந்தது. அதே நேரம் வாராந்திர பாதிப்பு விகிதம் 16.56 சதவீதத்தில் இருந்து 16.65 ஆகவும் உயர்ந்தது.

நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 48,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் மும்பையில் பாதிப்பு 5,008 ஆக குறைந்த நிலையில், புனே நகரத்தில் ஒருநாள் பாதிப்பு 16,618 ஆக உயர்ந்தது.

இதேபோல மகாராஷ்டிராவின் சில முக்கிய நகரங்களில் பாதிப்பு மீண்டும் அதிகரித்ததால் தினசரி பாதிப்பு உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் 48,049, கேரளாவில் 41,668 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 29,870 ஆக உயர்ந்தது.

குஜராத்தில் 21,225, ராஜஸ்தானில் 16,878, உத்தரபிரதேசத்தில் 16,159, ஆந்திராவில் 13,212, டெல்லியில் 10,756 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் மேலும் 488 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 106 பேர் அடங்குவர்.

இதுதவிர மகாராஷ்டிராவில் 52, டெல்லியில் 38, தமிழ்நாட்டில் 33, மேற்கு வங்கத்தில் 35, பஞ்சாபில் 31, கர்நாடகாவில் 22, உத்தரபிரதேசத்தில் 22, குஜராத்தில் 16 பேர் நேற்று இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,88,884 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரேநாளில் 2,42,676 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 63 லட்சத்து 1 ஆயிரத்து 482 ஆக உயர்ந்தது.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,13,365 ஆக உயர்ந்தது. இது நேற்று முன்தினத்தைவிட 94,540 அதிகம் ஆகும்.

நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,050 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 3.69 சதவீதம் அதிகம் ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 67,49,746 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 161 கோடியே 16 லட்சத்தை கடந்துள்ளது.

3-வது அலையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரேநாளில் 19,60,954 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மொத்த பரிசோதனை எண்ணிக்கை 71.34 கோடியாக உயர்ந்துள்ளது.