இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16,135 ஆக இருந்த நிலையில் இன்று வெகுவாக சரிந்துள்ளது நாடு முழுவதும் புதிதாக 13,086 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 3,322, தமிழ்நாட்டில் 2,654, மகாராஷ்டிராவில் 1,515, மேற்கு வங்கத்தில் 1,132 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் மொத்தபாதிப்பு 4 கோடியே 35 லட்சத்து 31 ஆயிரத்து 650 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் மகாராஷ்டிராவில் 3 பேர் உள்பட மேலும் 19 பேர் இறந்துள்ளனர்.
இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,25,242 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 12,456 பேர் நேற்று குணமாகினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 91 ஆயிரத்து 933 ஆக உயர்ந்தது. தற்போது 1,14,475 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 611 அதிகம் ஆகும்.
நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 198 கோடியே 9 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் நேற்று 11,44,805 டோஸ்கள் அடங்கும். இதற்கிடையே நேற்று 4,51,312 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 86.44 கோடியாக உயர்ந்துள்ளது.