யுபிஐ என்று அழைக்கப்படும் ‘ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்’, ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 730 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டது என நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் யுபிஐ மூலம் 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அது 7.7 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 6 ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி தொடங்கப்பட்டதிலிருந்து அதிகபட்சமாக கடந்த அக்டோபர் மாதத்தில், ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.