இந்தியாவிலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க பெண் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் – புழல் சிறை அருகே கட்டப்படுகிறது

தமிழக சிறைத் துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், சென்னை புழலில் முதல் முறையாக திறக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து திருச்சி, வேலூர், கோவை உள்ளிட்ட இடங்களிலும் சிறைத் துறை சார்பில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டன. இந்த பங்க்குகளை தற்போது ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனர். நன்னடத்தை கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல் பங்க்குகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கு மூலம் சுமார் 25 கைதிகள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

பெட்ரோல் பங்க் மூலம் சிறைத் துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், கைதிகளும் சம்பாதித்து வருகின்றனர். இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கும் வகையில், புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை அருகே ரூ. 1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டர் பரப்பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பெட்ரோல் பங்க்குகளை பெண் கைதிகள் மட்டுமே இயக்க உள்ளனர். ‘இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கைதிகள் மட்டும் இயக்கக் கூடிய பெட்ரோல் பங்க் புழலில் தான் திறக்கப்படுகிறது. இது ஒரு மாதத்தில் திறக்கப்படும்’ என்று சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.

இந்த பெட்ரோல் பங்க்கின் ஒரு பகுதியில் கைதிகள் தயாரிக்கும் பொருள்களும் விற்பனை செய்யப்படும். பெட்ரோல் பங்க் கட்டுமானப் பணிகளை தமிழக சட்டம், நீதி, சிறைகள் சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அவருடன் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், முருகேசன் ஆகியோர் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் ரகுபதி, புழல் சிறை வளாகத்தில் நடைபெற்ற ‘சிறைகளின் கலை’ என்ற புதிய திட்ட தொடக்க விழாவில் பங்கேற்றார். இந்தத் திட்டத்தின்படி, கைதிகளுக்கு தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம், விளையாட்டு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news