இந்தியாவிலேயே அதிகம் ஏ.டி.எம் உள்ள மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம்
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து எந்த நேரத்திலும் எளிதாக பணம் எடுப்பதற்கு வசதியாக ஏ.டி.எம். கொண்டு வரப்பட்டது. இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய
வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
தற்போது ஏ.டி.எம். எந்திரங்களிலேயே நிறைய வசதிகள் வந்து விட்டன. பணம் எடுப்பது மட்டுமல்லாமல், பணம் போடுவது, பணம் பரிமாறுவது உள்ளிட்ட வசதிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும்
இந்த ஏ.டி.எம். எந்திரங்கள் வங்கி அருகில் மட்டுமின்றி பெரும்பாலான முக்கிய இடங்களிலும் அந்தந்த வங்கிகள் சார்பில் நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவிலேயே அதிக ஏ.டி.எம்.களை கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி தமிழகம் 28 ஆயிரத்து 540 ஏ.டி.எம்.களுடன் அதிக ஏ.டி.எம்.களை கொண்ட
மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது.
இரண்டாமிடத்தில் மராட்டியம் உள்ளது. அங்கு 27 ஆயிரத்து 945 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. மூன்றாமிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு 23 ஆயிரத்து 460 ஏ.டி.எம். எந்திரங்கள்
நிறுவப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் 19 ஆயிரத்து 613, மேற்கு வங்காளத்தில் 13 ஆயிரத்து 565, குஜராத்தில் 12 ஆயிரத்து 699, ஆந்திராவில் 12 ஆயிரத்து 357, தெலுங்கானாவில் 11 ஆயிரத்து 910, ராஜஸ்தானில் 11 ஆயிரத்து 296,
கேரளாவில் 11 ஆயிரத்து 54 ஏ.டி.எம் மையங்களும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.