Tamilசெய்திகள்

இந்தியாவிலும் கொரோனாவின் 2 அலை வரும் – அமைச்சர் சுதாகர்

உப்பள்ளியில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு அந்த மையத்தை திறந்து வைத்து பேசும்போது கூறியதாவது:-

உப்பள்ளி வணிக நகரமாக திகழ்கிறது. இதை சுகாதார நகரமாக மாற்ற வேண்டியுள்ளது. இந்த பகுதியில் ஒரு புற்றுநோய் ஆஸ்பத்திரி தொடங்கப்படும். அதற்கான தேவை இங்கு இருக்கிறது. கித்வய் மருத்துவமனை நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அதே தரத்துடன் இங்கு புற்றுநோய் ஆஸ்பத்திரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் வட கர்நாடக மக்களுக்கு பெரும் பயன் கிடைக்கும். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா 2-வது அலை தொடங்கியுள்ளது. அதனால் அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நமது நாட்டிலும் கொரோனா 2-வது அலை வரும். அது தொடர்பான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கர்நாடகத்தில் தற்போது வைரஸ் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் கொரோனா இன்னும் முழுமையாக நம்மை விட்டு போகவில்லை. உப்பள்ளியில் 90 சதவீத மக்கள் முகக்கவசம் அணிந்து விதிமுறைகளை பின்பற்றுகிறார்கள். பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்கிறார்கள். ஒட்டுமொத்த மாநில மக்களும் இவ்வாறு செயல்பட வேண்டும்.

கொரோனா நெருக்கடி நேரத்தில் சில தனியார் மருத்துவமனைகள் மருத்துவ சேவையை நிராகரித்த உதாரணங்கள் உண்டு. ஆனால் அரசு டாக்டர்கள் விசுவாசத்துடன் பணியாற்றியுள்ளனர். இந்த கிம்ஸ் ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான முறையிலும், பாதுகாப்பாகவும் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இதுவரை 1 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு சுதாகர் கூறினார்.