Tamilசெய்திகள்

இந்தியாவின் விடுதலைப் போராட்டம் என்பதே தெற்கில் இருந்துதான் முதன்முதலில் தொடங்கியது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் வரலாற்றுக்கும் வளர்ச்சிக்கும் தெற்கு வழிகாட்டுகிறது என்று நாங்கள் சொல்வதை, மொழிப்பற்றால் – இன உணர்வால் சொல்வதாக யாரும் நினைக்கக் கூடாது. வரலாறு சொல்லும் பாடம் என்பதும் அதுதான். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பண்பாட்டு நெறிமுறைகளைக் கொண்ட சமூகமாக கீழடியிலும் – ஆதிச்சநல்லூரிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை இந்த வரலாறு சொல்லத் தொடங்கி இருக்கிறது.

இந்தியாவின் விடுதலைப் போராட்டம் என்பதே தெற்கில் இருந்துதான் முதன்முதலில் தொடங்கியது. கிழக்கிந்தியக் கம்பெனி உருவாகி அடிமைப்படுத்துதல் உருவானபோதே அதற்கு எதிரான விடுதலை முழக்கமிட்ட மண், இந்தத் தென்னக மண். இந்தியர்களுக்கு ஓரளவு நிர்வாக சுதந்திரம் தரலாம் என்று முடிவெடுக்கப்பட்டு, இரட்டையாட்சி முறை 1920-ஆம் ஆண்டு உருவானது.

அப்போது அந்த இரட்டையாட்சி முறையை முறைப்படி நடத்தி மக்களாட்சியின் மாண்பைக் காத்த அரசு அன்றைய சென்னை மாகாண நீதிக்கட்சியினுடைய அரசு. அன்றைக்கு சென்னை ராஜதானி சட்டமன்றத்தின் நடவடிக்கைகள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் போல இருக்கும் என்று சொல்லி அயல்நாடுகளில் இருந்து வரக்கூடிய பார்வையாளர்கள் நம்முடைய சட்டமன்றத்தை வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள்.

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது வகுப்பின் அளவுக்கு தகுந்த இடஒதுக்கீடு எனும் சமூகநீதி உரிமையை வழங்கியது தமிழ்நாடு. பெண்களுக்கு வாக்குரிமை என்பது 1921-ஆம் ஆண்டே சட்டமாகக் கொண்டு வரப்பட்டது.

சாதியின் பெயரால் பாகுபாடு காட்டப்பட்டால் அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என முதன்முதலாக சட்டம் போட்டது தமிழ்நாடு. இந்தியாவின் மாநிலங்கள் மொழிவழியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று முதலில் சொன்னது தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை நிலைநாட்ட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யக் காரணமானது தமிழ்நாடு.