வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல் பிரதேச மாநிலங்கள் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து போகிபீல் என்ற இடத்தில் 4.94 கி.மீ. நீளத்தில் இரண்டடுக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
1997-ல் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்டு 2002-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு முறை காலக்கெடுக்களைக் கடந்த பாலம், கடந்த டிசம்பர் 3-ம் தேதி பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. ரூ.5900 கோடி செலவில் கட்டப்பட்ட இப்பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
இப்பாலம் இந்தியாவின் மிக நீளமான ரெயில்வே பாலம் ஆகும். ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் ஆகும். இதில், மேலே மூன்று வழிச்சாலையும் கீழே இரண்டு வழி ரெயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பாலத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டவுடன் வட கிழக்கு மாநிலங்களில் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்க முடியும். வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதாரம் மேம்படும். வடகிழக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு இந்த பாலம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
இதுவரை ரெயில்வேயின் மிக நீளமான பாலமாக கேரளாவின் வேம்பநாடு ரெயில்வே மேம்பாலம் விளங்கியது. இதன் நீளம் 4.62 கிமீ என்பது குறிப்பிடத்தக்கது.