Tamilவிளையாட்டு

இந்தியாவின் தோல்வியால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு பறிபோய்விட்டது – சோயிப் அக்தர் கருத்து

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று பெர்த்தில் நடைபெற்றது. அதிவேக பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாதல் திணறினர். சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக விளையாடி 40 பந்தில் 68 ரன்கள் சேர்த்தார்.

இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருக்கும். ஆனால், தோல்வியடைந்ததால் புள்ளிகள் பட்டியலில் தென்ஆப்பிரிக்கா முதல் இடம் பிடித்துள்ளது. சூப்பர் 12 குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள இந்தியா, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா 3 போட்டிகளில் விளையாடிவிட்டன.

பாகிஸ்தான் 3-ல் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 5-வது இடத்தில் உள்ளது. தற்போது தென்ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்ததன் மூலம் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய மங்கி விட்டது. பாகிஸ்தான் அடுத்து தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் பெறும். ஒன்றில் தோல்வியடைந்தால் கூட வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த நிலையில், இந்தியா தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்ததன் மூலம், பாகிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பை அழித்து விட்டது என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ”தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து, பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை இந்தியா அழித்து விட்டது. பாகிஸ்தான் மிகவும் மோசமாக விளையாடினார்கள். நாம் இதை அடுத்தவர்கள் மீது விட்டுவிட்டோம். இந்தியா மீண்டும் வலுவாக திரும்பும் என்றும் நம்புகிறோம்.

இந்தியா விளையாடிய விதம், தரமான பந்து வீச்சுக்கு எதிராக ஆசிய அணிகளின் நிலை, வெளிப்படையாக வெளிப்படும் என்பதை காட்டுகிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் ஆட்டம் அம்பலமாகியுள்ளது. இருந்தாலும் அவர்கள் போட்டியில் இருந்து வெளியேறவில்லை. அவர்களுக்கு இன்னும் எளிதான ஆட்டங்கள் உள்ளன. ஆனால், பாகிஸ்தான் கடினமான தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது பார்க்கும் வகையில் அது கடினமாகவும், சாத்தியமற்றதாகவும் உள்ளது. இருந்தாலும், எனது அணிக்குதான் ஆதரவு. என்னதான் நடக்கும் என்றும் பார்ப்போம். இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடுவது எளிதானது அல்ல. இந்தியா எங்களை மிகவும் ஏமாற்றம் அடையச் செய்தது.

இந்திய வீரர்கள் சற்று சுதாரித்துக் கொண்டு, 150 ரன்கள் எடுத்திருந்தால், அது வெற்றிக்கான ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால், எங்களை ஏமாற்றம் அடையச் செய்து விட்டது. தென்ஆப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா 4 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வங்காளதேசம் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஜிம்பாப்வே 3 இடத்திலும் உள்ளன.” என்றார்.