இந்திய அணியின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. அவருக்குப்பின் ஹர்பஜன் சிங் ஆதிக்கம் செலுத்தினார். அதன்பின் அஸ்வின் முதன்மை பந்து வீச்சாளராக இருந்தார். இங்கிலாந்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின், வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற தொடரில் மட்டுமே அஸ்வின் இடம்பிடித்தார். அதன்பின் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் அற்புதமாக பந்து வீச அஸ்வின் மற்றும் ஜடேஜாவை இந்திய அணி நிர்வாகம் தேடவில்லை.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற அஸ்வினின் பந்து வீச்சு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. அதன்பின் காயத்தால் கடைசி மூன்று போட்டிகளில் அவர் விளையாடவில்லை. சிட்னி டெஸ்டில் குல்தீப் யாதவ் இடம்பிடித்தார்.
அவர் முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெடுக்கள் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் வெளிநாட்டு தொடருக்கான இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்தான் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘இந்திய டெஸ்ட் அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் நடைமுறையில் இருப்பார்கள். ஏற்கனவே, குல்தீப் யாதவ் வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். ஆகவே, அவர் இந்திய அணியின் வெளிநாட்டு தொடருக்கான முதன்மை சுழற்பந்து வீச்சாளராகியுள்ளார்.
வரும் காலங்களில் நாங்கள் ஒரு சுழற்பந்து விச்சாளருடன் விளையாட முடிவு செய்தால், குல்தீப் யாதவை ஆடும் லெவன் அணியில் சேர்ப்போம். ஒவ்வொருவருக்கும் ஒரு நேரம் உண்டு. தற்போது குல்தீப் யாதவ் வெளிநாட்டு தொடருக்கான முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்.
சிட்னியில் அவர் பந்து வீசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கூட இதுபோன்ற ரிஸ்ட் ஸ்பின்னர்களுடன் விளையாடலாம். சிட்னியில் அவர் பந்து வீசியதன் மூலம், எங்களின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராகியுள்ளார்’’என்றார்.