X

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் – பாகிஸ்தான்

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பிரிவினைவாதிகள் தலைவருடன், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு, காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண தங்கள் அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து கலந்துரையாடியதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பாகிஸ்தான் தூதரையும் அழைத்து எச்சரிக்கை விடுத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷாமுகமது குரேஷி கூறுகையில், ‘இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடும் எண்ணம் பாகிஸ்தானுக்கு இல்லை. காஷ்மீர் பிரிவினைவாத தலைவருடன் பேசியதை இந்தியா பெரிதுபடுத்த வேண்டாம். தங்கள் நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு பாகிஸ்தானை குறை கூறுவதை இந்தியா முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இந்தியா தாமதப்படுத்துகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்தியாவில் அமையும் புதிய அரசு பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட விரும்பினால், பேச்சுவார்த்தை நடத்துவோம்’ என்று குறிப்பிட்டார்.