Tamilசெய்திகள்

இந்தியர்களின் கை, கால்களை கட்டி நாடு கடத்திய அமெரிக்கா!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முறையான விசா இல்லாமல் அமெரிக்காவில் வாழ்ந்து வருபவர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. விசா காலம் முடிந்த பின்னர் தங்கி இருப்பவர்கள், போலி பெயர்கள் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான வகையில் தங்கி இருப்பவர்களை உள்ளூர் மக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பி உள்ளது. இதில் 142 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். இவர்களில் பெரும்பாலானேர் 20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவார்.

அமெரிக்காவின் அரி சோனா மாகாணத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு இவர்கள் அனைவரும் ஒரே விமானத்தில் நேற்று டெல்லி விமானநிலையம் வந்தனர். இவர்களில் அரியானைவை சேர்ந்த ரவிந்தர் சிங் (25) என்பவரும் ஒருவராவார்.

விமான நிலையத்தில் இவர்களது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சரிபார்த்தனர். அதன்பிறகு அனைவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அவர்களது ஊருக்கு அனுப்பப்பட்டனர்.

முன்னதாக இவர்களது கைகள், கால்கள் கட்டப்பட்டிருந்தது. டெல்லி வந்த பிறகு தான் அவை அவிழ்த்து விடப்பட்டு உள்ளது.

145 இந்தியர்களுடன் இலங்கை, வங்காளதேசம் நாட்டை சேர்ந்தவர்களும் அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பபட்டுள்ளனர்.இவர்கள் வந்த விமானம் வங்காளதேசம் தலைநகர் டாக்கா வழியாக வந்துள்ளது. அங்கு 25 வங்காளதேசத்தினரை இறக்கிவிட்டு அதன்பிறகு டெல்லி வந்துள்ளது.

நாடு திரும்பியவர்களில் பெரும்பாலோனோர் பஞ்சாப், அரியானா, மும்பை மற்றும் குஜராத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சர்வதேச ஏஜெண்டுகளிடம் தலா ரூ.25 லட்சம் வரை கொடுத்ததாக திரும்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் ஈக்வடார், ஐரோப்பா. கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளின் எல்லைகள் வழியாக சர்வதேச ஏஜெண்டுகள் மூலம் அமெரிக்காவுக்குள் அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு அரிசோனா, கலிபோர்னியா, டெக்சாஸ், ஜார்ஜியா, நியூஜெர்ஸி உள்ளிட்ட மாகாணங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியேறி அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சட்ட விரோதமாக குயியேறியவர்களை அங்குள்ள புலம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் கை, கால்களை கட்டி தங்க வைத்துள்ளனர். அதன் பிறகு மொத்தமாக ஒரே விமானத்தில் அனைவரையும் திருப்பி அனுப்பி உள்ளனர்.

பல்வேறு நாடுகள் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தாலும் மெக்சிகோ வழியாகத்தான் பெரும் பாலானோர் சட்ட விரோதமாக குடியேறுவதாக அமெரிக்கா கூறுகிறது.

இதனால் மெக்சிகோ அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் அத்தனை பொருட்களுக்கும் கடும் விரிவிதிக்க நேரிடும் எனவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *