Tamilசினிமா

‘இந்தியன் 2’ படத்திற்கு தடை கோரிய வழக்கு – விளக்கம் அளிக்க கோரி படக்குழுவினருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இரண்டாம் பாகமாக வெளியாக இருக்கும் படம் இந்தியன்-2. இந்த திரைப்படம் ஜூலை 12-ந்தேதி வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான வேலைகளை படக்குழு தீவிரமாக நடத்தி வருகிறது.

இதற்கிடையே மதுரை எச்.எம்.எஸ். காலனியை சேர்ந்த வர்மக்கலை, தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், லைகா புரெடக்ஸன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 திரைப்படம் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்தியன் படத்தின் முதலாம் பாகம் தயாரித்த போது, அந்த படத்தில் கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து தன்னிடம் ஆலோசித்து அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டது. அதற்காக எனது பெயரும் அந்த படத்தில் இடம் பெற்றது. ஆனால் தற்போது, இந்தியன்-2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

அதில் கமல்ஹாசன் முதலாம் பாகத்தின் வர்மக் கலை முத்திரையை பயன்படுத்தி உள்ளது போன்ற படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது தொடர்பாக எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்த வில்லை. எனவே படத்தை எந்த தளம் வாயிலாகவும் வெளியிடக்கூடாது. குறிப்பாக திரையரங்குகள் மற்றும் ஓ.டி.டி. தளங்கள் என எந்த வகையிலும் வெளியிட நிரந்தர தடை விதித்து உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனுவை மதுரை மாவட்ட உரிமையியல் கோர்ட்டு நீதிபதி செல்வ மகேஸ்வரி வழக்கு விசாரணைக்கு உகந்ததாக கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் இது தொடர்பாக எதிர் மனுதாரர்களான கமல்ஹாசன், இயக்குனர் சங்கர், லைகா நிறுவனத்தை சேர்ந்த சுபாஷ்கரன் ஆகியோர் மனு குறித்து தங்களது ஆட்சேபனையை ஆட்சேபனையை நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாக அளிக்க கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது.