X

இந்தியன் 2 படத்தின் புகைப்படங்கள் லீக் – படக்குழு அதிர்ச்சி

கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் உள்ளனர். வித்யூத் ஜமால் வில்லனாக வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது.

அதன்பிறகு தியாகராய நகரில் உள்ள சிறிய ஓட்டலில் படப்பிடிப்பை நடத்தினர். தொடர்ந்து ஐதராபாத்திலும் ராஜமுந்திரி சிறையிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் படக்குழுவினர் போபால் சென்றனர். அங்கு 2 ஆயிரம் துணை நடிகர்களுடன் பிரமாண்ட சண்டை காட்சியை இயக்குனர் ஷங்கர் படமாக்கினார்.

இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருக்கும் கமல்ஹாசன் குதிரையில் செல்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியன் படத்தில் கமல்ஹாசனின் சேனாதிபதி கதாபாத்திரம் 60 வயது முதியவராக இருந்தது. இந்தியன்-2 படத்தில் 90-வயது முதியவராக வருகிறார். இதற்காக வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து வயதான தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். மேக்கப் போட பல மணிநேரம் ஆவதாக கூறப்படுகிறது.

90 வயது கிழவர் வேடத்தில் வரும் கமல்ஹாசனின் வர்ம கலை அதிரடி சண்டை காட்சிகள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் உருவாகி உள்ளது” என்று படக்குழுவினர் தெரிவித்தனர். அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தைவான் செல்ல திட்டமிட்டுள்ளனர்.