சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணா சிலை அருகே இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை ஊழியர்கள் வழக்கம்போல் பணி முடிந்து வங்கியை பூட்டி விட்டு சென்றனர். 2 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று காலை அலுவலர்கள் வங்கிக்கு வந்தனர். அப்போது வங்கியின் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மானாமதுரை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அப்போது வங்கியின் கிரில் கேட் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதும், மேலும் வங்கியின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கதவு உடைந்திருந்தது.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வங்கியின் கதவை உடைத்து உள்ளனர். ஆனால் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் கொள்ளை முயற்சியை பாதியிலேயே கைவிட்டு சென்றதாக தெரிகிறது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் கொள்ளை முயற்சி தொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
முதல் கட்டமாக அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள். கொள்ளையர்கள் பாதியிலேயே சென்றதால் பல கோடி ரூபாய் தப்பியது.