இதை செய்தால் அடுத்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடலாம் – கவாஸ்கர் யோசனை
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 13 சீசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனிக்கு சரியாக அமையவில்லை. முதல் இரண்டு மூன்று போட்டிகளில் மிகவும் பின்வரிசையில் களம் இறங்கினார். சில ஆட்டங்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் அடுத்த சீசனில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் கூட எழுந்தது. ஆனால் சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அடுத்த சீசனிலும் எம்எஸ் டோனிதான் கேப்டன் என்றார். எம்எஸ் டோனியும் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டம் கடைசியான போட்டி இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
இதனால் 2021 சீசனிலும் எம்எஸ் டோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 2021 சீசனில் டோனியால் 400 ரன்கள் அடிக்க முடியும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘ஒரு சிறிய விசயத்தை அவர் உற்று நோக்க வேண்டும். அதன் அர்த்தம் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டி போதுமான அளவிற்கு இல்லை. அதனால் அவரால் அதிக அளவு விளையாட முடியாது. ஆனால், போட்டி கொடுக்கக்கூடிய ஆட்டத்தில் விளையாட வேண்டும், வலைப்பயிற்சியில் நெருக்கடி இருக்காது. போட்டி நெருக்கடியை கொண்டு வரும். இதை அவர் செய்தால் அடுத்த சீசனில் 400 ரன்கள் அடிக்க முடியும்’’ என்றார்.