இது பெண்களின் காலமாக மாறிவிட்டது – நடிகர் நாசர் பேச்சு
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் நாசர், ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கலை விழாவில் நடிகர் நாசர் பேசியதாவது, 2 வருடங்களாக
வீட்டிற்குள்ளேயே இருந்தோம். இன்று இவ்வளவு பெரிய விழா குதூகலத்துடனும், உற்சாகத்துடனும் நடக்கிறது.
லயோலா கல்லூரிக்கும் எனக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. பள்ளி படிப்பு முடிந்ததும் எல்லோருக்கும் லயோலா கல்லூரியில் சேர வேண்டும் என்று தான் எண்ணம் தோன்றும். ஆனால், அதற்கு
அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமே ஆகையால், அந்த கொடுப்பினை எனக்கில்லை. மேலும், விஸ்காம் என்கிற பட்டபடிப்பு தமிழ் நாட்டில் மூளை முடுக்கிலும் இன்று இருக்கிறது. ஆனால், அது
முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது லயோலா கல்லூரியில் தான். நடிகர் சங்கத்தின் பொதுக்குழு இங்கு தான் நடைபெற்றது. நிறைய குழந்தைகள் இந்த சினிமா துறைக்கு வருவதற்கு
ஆசைப்படுகிறார்கள். இன்றைய காலத்தில் சினிமாத்துறை என்பது மற்ற துறைகளை விட மிகவும் ஈர்ப்பு மிக்க ஒரு துறையாக உள்ளது.
சினிமாத்துறைக்கு வர ஆசைப்பட்டால் அதற்குண்டான படிப்பை படித்து விட்டு வாருங்கள். நீங்கள் இப்போது படிக்கும் படிப்பிற்கு ஏற்றவாறு ஒரு பணியில் அமர்ந்து விட்டு நீங்கள் உங்கள் ஆசையை
நிறைவேற்றி கொள்ளலாம். குறும்படம் எடுக்கலாம், ஆவணப்படம் எடுக்கலாம், அப்போதும் சாதிக்கலாம்.
இல்லையெனில், நீங்கள் எல்லாத்தையும் விட்டு விட்டு சினிமாவிற்கு வந்தீர்களேயானால் நான் பரந்த கைகளுடனும் பெரிய இதயத்துடனும் வரவேற்கிறேன். ஏனென்றால், இந்த துறைக்கு நிறைய
திறமையாளர்கள் தேவை, புதிய யோசனைகள் தேவை. என் மனைவி தான் என் அலுவலகத்தை பார்த்துக் கொள்கிறார். அவர் சைக்காலஜி படித்தவர். இருப்பினும், எல்லாத்தையும் எனக்காக
விட்டுவிட்டு என் அலுவலகத்தை பார்த்துக் கொள்கிறார். என் குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறார். நான் சம்பாதித்து கொண்டு வருவதை விட, சம்பாதித்தாலும் அந்த பணத்தை தயாரிப்பதில்
போட்டுவிட்டு பிரச்சினையைத் தான் கொண்டு வருவேன். அது அனைத்தையும் என் மனைவி கமிலா தான் தீர்த்து வைப்பார். ஆண்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். ஏனென்றால், ஒரு
பொறுப்பை ஒரு பெண்ணிடம் கொடுத்தால் ஆணை விட மிக சிறப்பாக செய்வார்கள் என்பதே நான் கண்கூடாக பார்த்த அனுபவம். இங்கு இவ்வளவு பெண் குழந்தைகளை பார்க்கும் போது நம் நாடு
முன்னேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.
நான் ஏன் பெண்களை பற்றி பேசுகிறேன் என்றால், நான் சென்ற வாரம் தான் சண்டிகர் மாநிலத்திலிருந்து சென்னை வந்தேன். நான் வந்த விமானத்தை ஓட்டியது ஒரு பெண். அதே போல், வட
பழனியை தாண்டும் வேளையில் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்மணி “என்னா சார் நல்லாருக்கீங்களா?” என்று கேட்டார்.. மிகவும் சந்தோஷமாக இருந்தது. இது பெண்களின் காலமாக மாறிவிட்டது.
ஆண்கள் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவ்வாறு நாசர் பேசினார்.