இது படம் அல்ல, வாழ்க்கையில் கண்ட வலி – ‘மாமன்னன்’ படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். மாமன்னன் திரைப்படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சிவகுமார் இப்படத்தை புகழ்ந்து பகிர்ந்துள்ளார். அதில், தம்பி மாரி செல்வராஜுக்கு! மாமன்னன் திரைப்படம் பார்த்தேன். இது படமில்லை. உங்கள் வாழ்க்கையில் கண்ட வலி. பாதிக்கப்பட்டவன்தான் இவ்வளவு ஆழமாகச் சொல்ல முடியும். திரைப்படம் மூலம் இன்னும் நீங்கள் சொல்ல வேண்டிய செய்தி நிறைய உள்ளது. உங்களையும் வடிவேலுவையும் சந்தித்து ஆரத்தழுவ எண்ணுகிறேன். விரைவில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘மாமன்னன்’ திரைப்படம் ஜூலை 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இந்திய அளவில் முதலிடத்திலும் உலக அளவில் 9-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.