X

இது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் – கெஜ்ரிவால் கைது குறித்து மம்தா பானர்ஜி கருத்து

மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து, மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி முதல்வர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படும்போது, சிபிஐ/இடி விசாரணையின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தண்டனையின்றி தங்கள் முறைகேடுகளைத் தொடர அனுமதிக்கப்படுவது மூர்க்கத்தனமானது. குறிப்பாக பாஜகவுடன் இணைந்த பிறகு. இது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.