Tamilசினிமா

இது எல்லாம் என்னுடைய தாய் தந்தை செய்த பாக்கியம் – நடிகர் சூரி நெகிழ்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சூரி, விடுதலை படம் குறித்தும் இளையராஜாவுடன் பணிபுரிந்தது குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, இளையராஜா சாரை நான் சினிமாவுக்கு வந்ததிலிருந்து நேரில் பார்த்ததே கிடையாது. அந்த வாய்ப்பே எனக்கு கிடைக்கவில்லை. விடுதலை படத்தின் மூலம் தான் அவரை அருகில் அமர்ந்து பார்க்க வாய்ப்பு கிடைத்தது. விடுதலை படத்தின் காட்டு மல்லி பாடல் தான் முதன் முதலில் இளையராஜா சார் புதிய ஸ்டியோவில் பதிவு செய்யப்பட்டது.

அந்த பாடல் பதிவு செய்யும் பொழுது இளையராஜா சார் என்னை பார்த்து உறைந்துவிட்டார். எனக்கு ஒரு மாதிரி பதட்டமாகிவிட்டது. எனது 45 ஆண்டு கால அனுபவத்தில் என்னுடைய கதாநாயகனை எதிரே அமரவைத்து டியூன் போட்டு காட்டியதே இல்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை நீங்க முதல் படத்திலே அமர்ந்திருக்கிறீர்கள் என்று என்னிடம் சொன்னவுடன் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இது எல்லாம் என்னுடைய தாய் தந்தை செய்த பாக்கியம் என்று நினைக்கிறேன். இவ்வாறு நடிகர் சூரி பேசினார்.