இது அராஜகத்தின் உச்சக்கட்டம் – இனவெறி தாக்குதல் குறித்து கோலி ட்வீட்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில், 3வது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனரீதியாக இழிவுபடுத்தியுள்ளனர். எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்த போது அவர்களை சீண்டியுள்ளனர்.

3வது நாள் ஆட்டம் முடிந்ததும் இந்திய கேப்டன் ரஹானே கள நடுவர்கள் பால் ரீபெல், பால் வில்சன் மற்றும் போட்டி நடுவர் டேவிட் பூன் ஆகியோரிடம் இது குறித்து புகார் அளித்தார். மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது. இந்திய வீரர்களை இனவெறியுடன் வசைபாடிய ரசிகர்களை வீடியோ பதிவுகளின் மூலம் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

நேற்றைய 4வது நாள் ஆட்டத்தில், சிராஜ் பந்து வீசிய பின்னர் பும்ரா பந்து வீசுவதற்கு முன் வந்தபோது பவுண்டரி கோட்டு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. ரஹானே, நடுவரை நோக்கி சென்றார். சக வீரர்களும் அவருடன் சென்றனர்.

நேற்றைய போட்டியிலும் ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து மீண்டும் இனவெறி கோஷம் எழுந்துள்ளது. இதுபற்றி இந்திய வீரர்கள் நடுவரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால், போட்டி இடையில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. போட்டி நடுவர்களும், இந்திய வீரர்களும் சில நிமிடங்கள் வரை பேசி கொண்டனர்.

இதன்பின்னர் போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கோஷம் எழுந்த பகுதியில் இருந்த ரசிகர்களை வெளியேறும்படி கேட்டு கொண்டனர். பார்வையாளர்கள் பகுதியில் சில வரிசைகள் காலியாக விடப்பட்டன. இதன்பின்பு போட்டி தொடர்ந்தது.

இந்நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பவுண்டரி லைன்களில் இது போன்ற பலவித தாக்குதல்கள் நடக்கின்றன. இது அராஜகத்தின் உச்சக்கட்டம். களத்தில் இவ்வாறு நடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools